நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள்.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக தேர்வு மையங்களுக்கு மாணவ மாணவிகள் அனைவரும் வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு எண்-95 முக கவசம் வழங்கப்படும். ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம், 50 மில்லி லிட்டர் சனிடைசர் பாட்டில், குடிநீர் பாட்டில் தவிர மின்னணு சாதன பொருட்கள், கைக்கடிகாரம், கைப்பைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட வேறு எதையும் தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்வர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும் ஷூ அணியக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.