மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 9 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் எட்டப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளுடன் போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளனர். அதன்படி இன்று புதுச்சேரியில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட், கடைகள் ஆகியவை மூடப்படும்.
மேலும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள், டெம்போகள் எதுவும் ஓடாது. புதுச்சேரியில் மட்டும் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட உள்ளது. இன்று தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்பட மாட்டாது. இதனைத் தவிர மற்ற மாநிலங்களிலும் இன்று பொது முடக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.