மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஆகவே சீக்கிரத்தில் சமையல் சிலிண்டரின் விலையானது 1,000 ரூபாயைத் கடக்கும் சூழல் தற்போது நிலவி வருகிறது. இதன் காரணமாக சிலிண்டருக்கு மானியம் வழங்குவது தொடர்பாக ஆலோசனையில் மத்திய அரசானது தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசிடம் 2 நிலைப்பாடுகள் இருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் ஒன்று மானியம் இல்லாமலேயே சமையல் சிலிண்டர்களை வழங்குவது ஆகும். மற்றொன்று குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் மானியம் வழங்குவது ஆகும். இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இருப்பினும் தற்போதைய நிலையில் மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் சில விதிமுறைகளின் அடிப்படையிலேயே சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ஆண்டு வருமானம் ரூபாய் 10 லட்சத்துக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மட்டும் சிலிண்டர் மானியமானது வழங்கப்படும்.
அதே போன்று உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கும் மானிய உதவியானது கிடைக்கும். கொரோனா காலக் கட்டத்தில் பொதுமக்களுக்கான சிலிண்டர் மானியமானது நிறுத்தப்பட்டது. தற்போதுதான் சிலிண்டர் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மானியம் வழங்குவதால் அரசுக்கு அதிகளவில் செலவாகிறது. கடந்த 2021 ஆம் வருடத்தில் மட்டும் சிலிண்டர் மானியத்துக்காக ரூபாய் 3,559 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.