இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.
அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வருகின்ற ஜூன் 27ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.