மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் படி ஒன்றிய அரசு விவசாயிகளுடன் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை. அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது . இந்த போராட்டத்தில் தற்போதுவரை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் வருகின்ற 27 ஆம் தேதி அன்று ‘பாரத் பந்த்’ போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி முழு ஆதரவு அளித்து, போராட்டத்தில் பங்கு பெறும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.