நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர், நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது.
இக்கட்டான சூழலை சமாளிக்க உங்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டும். மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது வரவேற்க்கத்தக்கது. மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே இது ஊரடங்கிற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.