இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதமே மத்திய அரசை எச்சரித்ததாக மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் மருத்துவர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நாங்கள் வரப்போகும் கொரோனா ஆபத்து குறித்து முன்னரே கூறினோம். அந்தச் செய்தி மோடியை எட்டவில்லை என்பதை நம்பமுடியவில்லை. தற்போது கொரோனா அதிகம் பரவும் போது ஒரு மாற்றமும் ஏற்படும். அதனால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.