இந்தியாவில் உள்ள பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் விதவைகளுக்கான பென்ஷன் திட்டம். அதாவது விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக வித்வா பென்ஷன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வந்தாலும் பென்ஷன் தொகை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் விதவை பெண்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள விதவைப் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
கணவனை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற சில தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது இந்த திட்டம் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்கு மட்டுமே.வேறு எந்த ஒரு ஓய்வூதிய திட்டத்தையும் பயன்படுத்தாத பெண்களுக்கு இந்த திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது. ‘
விதவைப் பெண்கள் பென்ஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, கணவரின் இறப்புச் சான்றிதழ், மொபைல் எண், இருப்பிட சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், வருமானச் சான்றிதழ், வயது சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் விதவைப் பெண்களுக்கு பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பென்ஷன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.