இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது.
பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஓலா நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை அமைத்து உற்பத்தி செய்து வருகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் பேர் இந்த ஸ்கூட்டரை புக்கிங் செய்து உள்ளனர்.
இந்நிலையில் ஓலா ஸ்கூட்டரை லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து வரும் நிலையில் ஓலா நிறுவனம் நாடு முழுவதும் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அதுமட்டுமில்லாமல் 400 இடங்களில் ஹைபர் சார்ஜிங் செட்டப் நிறுவ உள்ளனர். ஒரே நேரத்தில் பல வாகனங்களை இந்த ஹைப்பர் சார்ஜிங் செட்டப் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.