நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று மத்திய கல்வி மந்திரியும் பா.ஜ.க.வை சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளது, மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை யு.ஜி.சி. கண்டறிந்துள்ளது.
யு.ஜி.சி.,யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு; டெல்லியில் ஏழு; ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு: புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைகள் உள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.