இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 40.64கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு முதல் தவணையாக 9,76,43,768 டோஸ்களும், இரண்டாவது தவணையாக 2,93,47,090 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு முதல் தவணையாக 12,50,80,488 டோஸ்களும், இரண்டாவது தவணையாக 49,07,782 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.