பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகிறது. இதனால் அந்நிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ.7500 கோடி கடன் வழங்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு சில நிபந்தனைகளை நிறைவேற்றததால் சர்வதேச நிதியம் பணம் வழங்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகவும் பெரிய சோதனையாக உள்ளது. இந்நிலையில் நாடு எதிர்கொள்ளும் பொருளாதாரம் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசின் சொத்துக்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்வதற்காக அவசர சட்டத்துக்கு பிரதமர் ஷபாஷ் தலைமையில் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் பங்குகளையும், பிற அசையா சொத்துக்களையும் ஐக்கிய அரபு அமீரக, சவுதி அரேபியா கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு விற்பனை செய்வது குறித்து அரசுகளுக்கு இடையே வர்த்தக பரிவர்த்தனைகளுக்காக அமைச்சகத்தால் இந்த சட்டம் முன்மொழியப்பட்டது.
இந்த அவசர சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் நாடாளுமன்ற ஒப்புதகலுக்கு பிறகு அதிபரின் கையெழுத்தாக அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த அவசர சட்ட அமலுக்கு வரும் பட்சத்தில் அரசு நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை வெளிநாடுகளுக்கு விற்பதற்கு எதிரான மனுக்களை கோர்ட்டுகளால் விசாரிக்க முடியாது. அதே நேரத்தில் மந்திரி சபையின் அனுமதியின்றி எந்த ஒரு சொத்து விற்கப்படாதுஎன அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில் அரசின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் அவசர சட்டத்துக்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நாட்டின் திருடர்கள் விற்க அனுமதிக்க கூடாது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க சதி மூலம் பதவிக்கு வந்த ‘குற்றமந்திரி’ தலைமையிலான அரசாங்கம் எப்படி தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதில் நம்பிக்கை வைக்க முடியும். கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானை கொள்ளை அடித்து வந்த இவர்கள் தான் நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். இந்த திருடர்கள் நமது தேசிய சொத்துக்களை வஞ்சகமாக முறையில் விற்க ஒருபோது அனுமதிக்க கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.