Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் வளமைக்கு இது அவசியம்”… மத்திய உள்துறை அமைச்சர் பேச்சு….!!!!

சண்டீகரில் நேற்று அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அமைச்சா் அமித்ஷா, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடா்பான இருநாள் மாநாட்டைத் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது “போதைப் பொருள்களுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்தியஅரசு  செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு கடைப்பிடித்து வரும் சகிப்பின்மை கொள்கை இப்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. நலம்மிக்க சமுதாயம் அமைவதற்கும் நாட்டின் வளமைக்கும் போதைப் பொருள் ஒழிப்பு அவசியமாகும்.

போதைப் பொருள் கடத்தல் வாயிலாக ஈட்டப்படும் பணம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சாபில் போதைப் பொருள் கடத்தல் பிரச்சனை அதிகமாகவுள்ளது. போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக மாநிலஅரசுடன் இணைந்து செயல்பட பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு தயாராக இருக்கிறது. பஞ்சாபில் போதைப் பொருள் தடுப்பு மையத்தின் பிரிவு அமைக்கப்பட இருக்கிறது.

நாடு முழுதும் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் ஆகும். போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையானது கடந்த 7 வருடங்களில் 200 % அதிகரித்துள்ளது. அவ்வழக்குகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளின் எண்ணிக்கை 260 % அதிகரித்துள்ளது. சென்ற 2006 முதல் 2013 வரை 1.52 லட்சம் கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அளவு சென்ற 7 வருடங்களில் 3.3 லட்சம் கிலோவாக அதிகரித்து உள்ளது. அதே காலக்கட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூபாய் 768 கோடியிலிருந்து ரூ.20,000 கோடியாக அதிகரித்துள்ளது.

போதைப் பொருள் பயன்பாடு இளைஞா்களைப் அதிகளவில் பாதித்து வருகிறது. அதனை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விவகாரத்தில் கல்வி, உள்துறை, சமூகநலம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. மாநில அரசுகளும் இப்போராட்டத்தில் ஒன்றிணைவது அவசியமாகும். குறிப்பாக பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்களில் போதைப் பொருள் கடத்தல் அதிகமாக இருக்கிறது. போதைப் பொருள் ஒழிப்பில் அந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

போதைப் பொருள் தடுப்பு மையம் (என்சிபி) சாா்பாக நடத்தப்பட்ட இம்மாநாட்டில் பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோகித், ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா ஆகியோர் பங்கேற்றனர். போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய மாநாட்டை அமைச்சா் அமித் ஷா தொடக்கிவைத்த நிலையில், அவரது முன்னிலையில் காணொலி மூலம் நாட்டின் பல பகுதிகளில் சுமாா் 31,000 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் போலி மருந்துகள் அழிக்கப்பட்டது. தில்லி, சென்னை, குவாஹாட்டி, கொல்கத்தா போன்ற நகரங்களில் என்சிபி அதிகாரிகள் போதைப் பொருள்களை அழித்தனா்.

Categories

Tech |