இந்தியாவில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் சிறைக் கைதிகளுக்காக ஒரு சிறப்பான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவ்வாறு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யப்படும் நடைமுறை உள்ளது. இது தமிழ்நாட்டிலும் உள்ளது. சுதந்திர தினம் மற்றும் சில தலைவர்களின் பிறந்தநாளின் போது நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
தண்டனை அனுபவிக்கும் பொழுது வாரத்தில் ஒருமுறை மட்டும் தங்களது உறவினர்களை சந்தித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக சிறையில் வாழும் கைதிகளுக்கு ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் சிறை வளாகத்திற்குள் தங்களது மனைவி அல்லது கணவருடன் தனிமையில் நேரம் செலவைவிட அனுமதி வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 27ஆம் தேதி முதல் அமலாக உள்ளது.
சிறை தண்டனை அனுபவித்து வரும் பெண் அல்லது ஆண் குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் சிறை வளாகத்தில் தனி அறையில் தங்களது துணையுடன் இரண்டு மணி நேரம் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை கைதிகள் பயன்படுத்துவதற்கு முன்பு அவர்களுக்கு தொற்று வைரஸ் போன்ற பாதிப்பு இல்லை என்று மருத்துவ சான்றிதழ் பெறுவது கட்டாயம். ஒவ்வொரு கைதிகளின் திருமண பந்தத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த சலுகை கொலை, பாலியல் குற்றவாளி உள்ளிட்டவருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.