நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது.
குறிப்பாக டெல்லியில் நடத்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என நேற்று நாடாளுமற்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கோஷமிட்டனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, பகைவர்களையும் நேசிக்குமாறு பாஜக எம்.பி.க்களுக்கு அறிவுரை அளித்துள்ளார். கட்சியை விட நாடே மிக முக்கியமானது என்று கூறிய அவர், கட்சி நலனை விட நம் நாட்டின் நலனுக்காக பாடுபட பாஜக.வினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.