கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் “கொரோனாவின் தாக்கம் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தினசரி பாதிப்பு 407 மாவட்டங்களிலும் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஆதலால் மாநிலத் தலைமை செயலாளர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.