தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் செயல்பாடுகள் எளிமையாக்கப்படும் என்று கலை பண்பாட்டு துறை கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. எனவே அவர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. வாரியத்தின் உறுப்பினராவதற்கு நடைமுறைகள் எளிமையானதாக இல்லை.
அதனை மாற்றி எளிமையாக பதிவு செய்யும் முறையில் மாற்ற வேண்டும். இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் செயல் திட்டங்கள் தயாரிக்கப்படும். கொரோனாவிற்கு பிறகு திருவிழாக்கள் நடத்துவது, பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கிரெடிட் கார்டுகளை வழங்கி, குறைந்த வட்டியில் கடன் பெறும் வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.