நாட்டு வெடியை தெரியாமல் கடித்த பசுமாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் மாதேவப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் அருகில் உள்ள நிலத்தில் மாடுகளை மேய்த்துள்ளார். அப்போது பசுமாடு தரையில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை தெரியாமல் கடித்துள்ளது. இதனால் மாட்டின் வாய்ப்பகுதியில் ரத்தம் வந்ததால் துடிதுடித்து பசுமாடு இறந்துள்ளது. இதுகுறித்து மாதேவப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மரியபுரம் பகுதியில் வசிக்கும் அமல்ராஜ் என்பவர் காட்டு பன்றியை வேட்டை ஆடுவதற்காக நாட்டு வெடியை தரையில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அமல்ராஜை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நான்கு நாட்டு மருந்து வெடிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.