அதிபர் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதற்கு இலங்கை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வின் காரணமாக அதிபரை பதவி விலக வலியுறுத்தி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் தான் இருக்கிறார் என்று சபாநாயகர் கூறினார்.
அதன்பிறகு அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், சபாநாயகரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வானுர்தி மூலம் மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கோத்தப்பய ராஜபக்சேவின் குடும்பத்துடன் 2 மெய்காவலர்களும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜபக்சே மற்றும் அவருடைய குடும்பத்தினரை ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக மாலத்தீவு மக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சே மற்றும் அவருடைய குடும்பத்தினரை உடனடியாக மாலத்தீவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவி செய்துள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. அதோடு இந்தியா எப்போதும் இலங்கை மக்களுக்கு தான் ஒற்றுமையாகவும், உறுதுணையாகவும் நிற்கும் என்றும் கூறியுள்ளது.