பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது நாளை முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாளை முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். 10 ரூபாய் நாணயத்தை அந்த இயந்திரத்தில் போட்டால் மஞ்சப்பை விழும். அந்த வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் காய்கறி, பழம் மற்றும் தானியங்கள் விற்பனை சந்தை உள்ளது. நாள் தோறும் இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் அவர்களுக்கு இந்த பை உபயோகமாக இருக்கும். இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாக குறையும். அதன்காரணமாக இந்தத் திட்டம் கோயம்பேட்டில் முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட உள்ளது.