செங்கல்பட்டு, விருதுநகர், திருப்பூர், திண்டுக்கல்லில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்நிலையில் நீட் தேர்வானது இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய கல்வி துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். மேலும் ஜூன் 13ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இணையதளமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அந்த இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக தேர்வு மையங்கள் 165ல் இருந்து, 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நேரமும் மதியம், 3:30 மணி முதல், இரவு, 7:00 மணி வரை இருந்தது, தற்போது, மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக தமிழ்நாட்டில் மேலும் நான்கு நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.