நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். அப்படி இருக்கையில் எனக்கு எதற்கு கட்டி கட்டியாக தங்கம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கட்டி கட்டியாக தங்க நகைகள், சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் எனக்குச் சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.
அதில் தங்க நகைகள், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. என்னிடம் மொத்தம் 300 சவரன் நகை மட்டும் தான் இருந்தது. கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது உண்மை கிடையாது. என் வீட்டின் முன்பு முறைகேடாக மணல் குவித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அது நான் வீடு கட்டுவதற்காக ரசீதுடன் வாங்கி வைத்துள்ளேன்.
அதையும் சரி பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டனர். நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். அப்படி இருக்கையில் கட்டி கட்டியாக தங்கம், வெள்ளி, வைர நகைகள் எனக்கு எதற்கு? என் மகன் வெளிநாட்டில் படிப்பதால் அமெரிக்க டாலர்களை வீட்டில் வைத்திருந்தேன். சமூக வலைதளங்களில் என்னிடமிருந்து கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் பரவுகிறது, உள்ளாட்சி தேர்தல் வர இருக்கும் நிலையில் இது என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.