ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் பணவீக்கத்திற்கு எதிராக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி கூறியதாவது, தற்போதைய அரசியல் இந்துக்கும், இந்துத்துவவாதிக்கும் இடையில் நடக்கும் போட்டியாகும். இந்த 2 வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தத்தை கொண்டதாகும். நான் இந்து. ஆனால் இந்துத்துவவாதி அல்ல. மகாத்மாகாந்தி இந்து ஆனால் கோட்சே இந்துவாதி. நம் நாடு இந்துக்களின் நாடு தான் ஆனால் இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் வெறும் அதிகாரத்தையே விரும்புகின்றனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மேலும் இந்துத்துவவாதிகள் ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தை தவிர அவர்கள் வேறு எதையும் விரும்புவதில்லை. அந்த அதிகாரத்தை பெறுவதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அனைத்து மதங்களையும் மதித்து யாருக்கும் பயப்படாதவரே இந்து. அதனால் இந்துத்துவவாதிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு இந்துக்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.