கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் ட்ரம்ப் நான் இறந்து விடுவேனா என்று கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலால் ராணுவ மருத்துவமனைக்கு அவசரமாக ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அதிபர் காய்ச்சலில் இருந்து விடுபட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் பற்றிய தகவல் 48 மணி நேரம் கழித்தே தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தனது உதவியாளர்களிடம் “நான் இறந்து விடுவேனா?” என்ற கேள்வியை பலமுறை எழுப்பி உள்ளதாக தெரியவந்துள்ளது. ட்ரம்பின் நண்பர் மற்றும் தொழிலதிபரான ஸ்டான்லி சேரா என்பவர் இந்த வருடத்தின் துவக்கத்தில் தொற்றினால் உயிரிழந்தார். மருத்துவமனை தரப்பில் ட்ரம்ப் உடல்நிலை குறித்து நம்பிக்கையான தகவல்களை கூறினாலும் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் முக்கிய கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க மறுத்து உள்ளனர்.
அதோடு அவர்கள் அந்த கேள்விகளை காது கொடுத்துக் கேட்கவும் தயாரில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. மேலும் வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் அதிபர் ட்ரம்ப் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இருக்கும் சூழலில் வெளிப்படையாக எதையும் கூறிவிட முடியாது என்றும் 48 மணி நேரங்கள் மிக மிக அவசியமான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.