Categories
தேசிய செய்திகள்

நான் ஊழல் செய்ததை நிரூபியுங்க… இப்போவே தூக்கில் தொங்குகிறேன்… அபிஷேக் பானர்ஜி ஆவேசம்…!!!

நான் ஊழல் செய்ததாக நிரூபித்தால் அப்போது தூக்கில் தொங்குவதற்கு தயார் என்று அபிஷேக் பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி முறைகேடு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு டில்லியில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. இதற்காக டெல்லி செல்வதற்கு கொல்கத்தா விமான நிலையம் வந்த அபிஷேக் பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நான் எந்த வகையான விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். கொல்கத்தா வழக்காக இருந்தாலும் டெல்லிக்கு என்னை வரவழைத்துள்ளனர்.  மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியுற்ற காரணத்தினால் பழி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நான் கடந்த நவம்பர் மாதம் பொதுக்கூட்டத்தில் சொன்னதை தான் மறுபடியும் கூற விரும்புகிறேன். சட்டவிரோதமாக நான் செயல்பட்டதை மத்திய அமைப்போ அல்லது சிபிஐயோ, அமலாக்கத் துறையோ நிரூபித்தால் நானே மேடை ஏறி பகிரங்கமாக தூக்கில் தொங்குகிறேன்.

அதுமட்டுமில்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் விசாரணை அமைப்புகள் என்ன சாதித்தது என்பது பற்றியோ? மோடி ஆட்சியில் நாட்டின் நிலை எப்படி இருக்கின்றது என்பது பற்றியோ? யாரேனும் விவாதிக்க தயாரா? இடம், நாள் நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நான் வருகிறேன். இந்த விவாதத்தில் பாஜகவை நான் தோற்கடிக்க விட்டால், நான் அதன்பின் அரசியலில் கால் பதிக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |