எவ்வித விசாரணையும் இல்லாமல் தாக்கிய போலீசார் மீது கறுப்பின ராணுவ அதிகாரி வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சேவையில் இருக்கும் கறுப்பின ராணுவ இரண்டாம் லெப்டினன் கரோன் நிசாரியோ என்பவர் அவரது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். அவர் ஓட்டி வந்த காரில் நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை. எனினும், அவர் தற்காலிகமாக ஒரு நம்பர் பிளேட்டை பார்வைக்காக வைத்திருந்தார். இந்நிலையில் இரண்டு போக்குவரத்து காவல்துறையினர் காரை உடனடியாக நிறுத்தும் படி அவரை துரத்தியுள்ளனர்.
இதனை கண்ட கரோன் நிசாரியோ அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் காரை நிறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த போக்குவரத்து அதிகாரிகள் இருவரும் துப்பாக்கியை காட்டி காரிலிருந்த அவரை இறங்கும்படி மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நான் எதுவும் செய்யவில்லை என்று கூறிய கரோன் நிசாரியோவின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து தரையில் முட்டி போட வைத்துள்ளனர். மேலும் எவ்வித விசாரணையும் இன்றி ராணுவ சீருடையில் இருந்த கரோன் நிசாரியோவின் கைகளில் விலங்கிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்பு எந்த வழக்கும் எழுதாமலேயே அவரை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கரோன் நிசாரியோ போலீசாரிடம் விளக்கம் கேட்டதற்கு நீங்க சரியாக ஒத்துழைக்கவில்லை என்று பதிலளித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் காரணமின்றி அச்சுறுத்திய இரண்டு போலீசார் மீது நார்போல்க் மாவட்ட நீதிமன்றத்தில் ராணுவ அதிகாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.