ஈரோடு மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து நகை பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா தெருவில் வசித்து வந்த குழந்தைவேல் (66) என்பவர் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி திண்டலிலிருந்து ஆனைக்கல் பாளையம் நோக்கி மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மூலப்பாளையம் பூந்துறை சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் மோட்டார் வாகனத்தை வழிமறித்து வருமானத் துறை அதிகாரி என்று கூறி உங்களிடம் சரியான ஆவணம் இருக்கிறதா என்று சொல்லி மிரட்டி அவரிடம் இருந்த தங்க மோதிரத்தை திருடிவிட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் குழந்தைவேல் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வந்தனர். இதே மாதிரி திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணி(73) என்பவர் தனது உறவினரை பார்ப்பதற்காக ஈரோடு கொல்லம் பாளையத்திற்கு மோட்டார் வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அவரை வழிமறித்து வருமான வரித்துறை அதிகாரி என்று மிரட்டி ஒரு பவுன் மோதிரத்தை பறித்து விட்டு தப்பித்து ஓடினார்.
மேலும் எழுமாத்தூர் காட்டுவலசு பகுதியில் நிலக்கடலை வியாபாரியான மணி என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனத்தில் ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு பூந்துறை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அவரையும் வழிமறித்து வருமான வரித்துறை அதிகாரி என்று மிரட்டி அவரிடம் உள்ள பணத்தை திருடி விட்டு ஓடினார்.
இதுகுறித்து சுப்பிரமணி, மணி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி காவல்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். மூன்று நபரிடம் வருமானத் துறை அதிகாரி போல நடித்து நகை பணத்தை பறித்து சென்ற நபர் ஒரே நபராக தான் இருக்க முடியும் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த குற்றவாளியை பிடிப்பதற்கு ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்படி விசாரணையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அப்துல் சலீம் (55) என்பவர் தான் மூன்று பேரிடமும் நகை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த அப்துல் சலீம்யை கைது செய்து அவரிடமிருந்து 1 1/2 பவுன் நகை 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.