இத்தாலியில் நடைபெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்ள தமக்கு வந்த அழைப்பை, பொறாமை காரணமாக பிரதமர் நரேந்திர மோடி தடுத்து விட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். ரோம் நகரில் நடைபெற உள்ள உலக அமைதி மாநாட்டில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில், மாநில முதலமைச்சர் ஒருவர் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று அதற்கு காரணம் கூறப்பட்டது.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய மம்தா பானர்ஜி ரோம் அமைதி மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி மறுத்திருப்பது தவறான செயல் என்று கூறினார். இந்துக்கள் குறித்து அதிகம் பேசும் பிரதமர் மோடி ஒரு இந்துப் பெண்ணான தனக்கு அனுமதி மறுத்தது ஏன்? என்ற கேள்வி எழுப்பினார். வெளிநாடுகளுக்கு செல்வது தமக்கு விருப்பம் இல்லை என்று குறிப்பிட்டார் மம்தா. ஆனால் இத்தாலிய அமைதி கூட்டம் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் மரியாதை என்பதால், அதில் பங்கேற்க விரும்பியதாக தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியை தலீபான் என்று குறிப்பிட்ட மம்தா, அக்கட்சியால் தன்னை ஒரு நாளும் தடுத்துவிட முடியாது என்று குறிப்பிட்டார்.
அதில் அவர், “உலக அமைதி மாநாட்டில் நான் கலந்து கொள்ள இத்தாலி அரசு சிறப்பு அனுமதி அளித்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனது பயணத்திற்கு ஏன் தடை விதித்தீர்கள்? ஒரு மாநில முதல்வருக்கு அனுமதி மறுத்து இருப்பது சரியல்ல. பாரதிய ஜனதா கட்சியால் என்னைத் தடுக்க முடியாது. நான் ஊர் சுற்றிப் பார்க்க செல்லவில்லை. வெளிநாடுகளிக்கு செல்வதில் எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் இது தேசத்தின் மரியாதையை பற்றியது” என்று பேசினார்.