தமிழக அரசு வாங்கிய கடனை அடைப்பதற்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தனது பங்கிற்காக 90,558 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார் .
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவை சேர்ந்த சின்ன ராஜா செல்லத்துரை சவுதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் முதல்வர் நிவாரண நிதிக்கு 90 ஆயிரத்து 558 ரூபாயை அனுப்பி வைத்து அத்துடன் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “சவுதி அரேபியாவில் நான் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் செய்தி பார்த்தேன். அதில் 2023 மார்ச் நிலவரப்படி தமிழக அரசின் கடன் 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெட்டுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை 7.21 கோடி.
அடுத்த ஆண்டு மார்ச் நிலவரப்படி ஒவ்வொரு தமிழனின் மீதும் உள்ள தமிழக அரசின் கடன் 90 ஆயிரத்து 558 ரூபாய். இதை அறிந்து நான் மிகுந்த வருத்தம் கொண்டேன். எனது கடனை தீர்க்க முடிவு செய்தேன். அதற்காக கடந்த ஆறு மாதத்தில் 90 ஆயிரத்து 558 ரூபாயை சேமித்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். தமிழக அரசின் கடனை செலுத்த என் பங்களிப்பு பயன்படும். தமிழகம் ஒரு குடும்பம். இந்த குடும்பத்தில் நான் பிறந்ததை மகிழ்ச்சியாக பார்க்கிறேன்” என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.