மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் வசித்து வருபவர் சேகர் (70). இவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து, அதன் பின் சீர்காழி நகர மன்ற உறுப்பினராக 3 முறையும், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாகவும் பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அ.தி.மு.க அறிவித்த மாநாடு பொதுக்கூட்டம் கட்சி பணிகளிலும் இரவு, பகல் பாராமல் பல வருடங்கள் உழைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் அ.தி.மு.க அறிவித்த போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். இந்நிலையில் “கட்சி நிர்வாகிகள் தற்போது இவரை மதிப்பதில்லை.
மேலும் நடந்து முடிந்த நகர மன்ற தேர்தலில் சரிவர உறுப்பினர்கள் தேர்வு செய்யாததால் அதிக அளவில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெற்றி பெற முடியலவில்லை. கட்சியின் ஒற்றுமை தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. கட்சிக்குள் நான்கு குழுக்களாக செயல்படுகின்ற காரணத்தால் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு பொறுப்பு கொடுத்து விடுகின்றனர். இதனால் என்னை போன்ற உறுப்பினர்கள் உதாசீனப்படுத்தி அவமானப்படுத்துகின்றார்கள். மேலும் சிலர் பதவிக்கு வந்தவுடன் தொண்டர்களை மறந்து விடுகின்றனர். அதனால் என்னுடைய உறுப்பினர் பொறுப்பில் இருந்து நான் விலகிக் கொள்வதாக முடிவு எடுக்கிறேன்” என எம்.ஜி.ஆர் சிலையிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் சிலையிடம் மனு கொடுக்க வந்த சேகர் கூறியதாவது, “நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அவர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே நான் கட்சியில் பயணித்து வருகிறேன். தற்போது கட்சியை விட்டு விலக மனமில்லாமல் விலகுவதாகவும், எனது விலகல் கடிதத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் புவன்ராஜ் போன்றவரிடம் அனுப்பியதாகவும்” கூறியுள்ளார்.