திண்டுக்கல் அருகே இரண்டாவது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்த் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நாகேஸ்வரியின் கணவர் மனோகரனுக்கும், அதே பகுதியில் வசித்து வரும் ராமேஸ்வரி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் ராமேஸ்வரியை மனோகரன் இரண்டாவதாக கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் ராமேஸ்வரியின் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மனோகரன் அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ராமேஸ்வரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் ராமேஸ்வரியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து காவல்துறையினர் மனோகர் மீது வழக்குப்பதிந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கூறியதாவது, நான் எனது மனைவி ராமேஸ்வரிக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்று கட்டியிருந்தேன். அதனை எனது பெயருக்கு மாற்றி தருமாறு கேட்டேன். ஆனால் அதற்கு அவரது குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லை. மேலும் ராமேஸ்வரி வெளிநபர் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனால் கோபமடைந்த நான் அவரை குத்தி கொலை செய்தேன் என்று காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.