லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக உதவி ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில், பத்மநாபன் என்பவர் தொழிலாளர் நல மையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபனிடம் இந்திய தேசிய தொழிலாளர் நல சங்கம் பொதுச் செயலாளரான ஆனந்தி என்பவர் 91 நபர்களுக்கு நலவாரிய அட்டை பெறுவதற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு மனு அளித்துள்ளார். அப்போது உதவி ஆய்வாளரான பத்மநாபன் தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஆனந்தி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின் லஞ்சம் வாங்கும்போது காவல்துறையினர் பத்மநாபனை கையும் களவுமாக பிடித்து விட்டனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பத்மநாபனுக்கு 9ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.