சோழிங்கநல்லூரிலுள்ள உணவகத்தில் பணிபுரிந்துவருபவர் சந்திரபாபு (35). இவர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையில் நின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர், தான் சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சோதனை செய்து, சந்திரபாபு பாக்கெட்டிலிருந்த போதைப் பாக்கு, 7,500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துள்ளார்.
பின்னர், போதைப் பொருள் வைத்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டுமெனக் கூறி அவரைப் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். பேருந்து அயனாவரம் ஜாயிண்ட் ஆபிஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பேருந்தில் பரிசோதகர் ஏறி டிக்கெட்டுகளை சோதனை செய்துள்ளார். அப்போது சந்திரபாபு, சிபிஐ அதிகாரி எனக் கூறிய நபர் ஆகிய இருவரிடமும் டிக்கெட் இல்லாததால் பேருந்தை விட்டு கீழே இறக்கி அபராதத் தொகை செலுத்துமாறு பரிசோதகர் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் குடிபோதையில் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால், அயனாவரம் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்துள்ளார்.
விசாரணையில் அந்த நபர் கொடுங்கையூரைச் சேர்ந்த ரஹீம் ( 52) என்பதும், சிபிஐ அதிகாரியாக நடித்து பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக எழும்பூர், வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இவரிடமிருந்து போலி வருமானவரித்துறை அடையாள அட்டை, போலி சிபிஐ அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.