கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜமாணிக்கம் என்பவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் பசுங்காயமங்கலம் சாலையில் ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராஜமாணிக்கம் 5- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அறைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து “நான் தான் விஷ்ணு பகவான். என் கண்ணை நன்றாக பார். எனக்கு நெற்றிக்கண் இருக்கிறது. நான் தான் கடவுள்” என கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனை வெளியே கூறினால் சாபம் கொடுத்து உன்னை அழித்து விடுவேன் என கூறி சிறுமியை மிரட்டியுள்ளார். இதேபோன்று மேலும் இரண்டு மாணவிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மாணவிகளின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.