கோவை தங்கம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 2001, 2006 ஆகிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். இதனை அடுத்து 2021-ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மு க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வில் இணைந்துள்ளார். கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி உடல் நலக்குறைவால் கோவை தங்கம் காலமானார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் சாய்பாபா காலனியில் இருக்கும் கோவை தங்கம் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, கோவை தங்கத்தின் உடல்நல பிரச்சனைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து நேரில் வந்து ஆறுதல் கூறியதற்காக கோவை தங்கத்தின் குடும்பத்தினர் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். அதற்கு “எனக்கு எதுக்கு நன்றி. நானே கோவை தங்கத்திற்கு நிறைய நன்றி கடன் பட்டிருக்கின்றேன். நான் இருக்கின்றேன். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள்’ என தெரிவித்துள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் போன்றோர் உடன் இருந்துள்ளனர்.