உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்கிம்பூர் கேரியில் இருந்து 27 வயது பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் மே 10 ஆம் தேதியன்று இந்திய-சீன எல்லை பகுதிக்கு அருகில் தடைசெய்யப்பட்ட பகுதியான நபிதாங்கிற்கு சென்றார். அவர் தன் தாயாருடன் கைலாஷ்-மானசரோவர் போகும் வழியிலுள்ள குஞ்சி பகுதிக்கு சென்றுள்ளார். அத்துடன் ஓம்பர்வத மலை பகுதியை பார்வையிட இருவரும் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். இதையடுத்து அவர்களுக்கு தார்ச்சுலா எஸ்டிஎம் வாயிலாக இன்னர்-லைன் அனுமதி வழங்கப்பட்டது. அது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்து அப்பகுதியை பார்வையிட15 தினங்கள் அனுமதி பெற்று இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் இருவரும் தார்ச்சுலா சப்-டிவிஷனின் கலாபானி பகுதிக்கு அருகில் நாபிடாங் கிராமத்திலுள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.
அவருக்கு சுற்றுலா போகும் பொருட்டு, 15 தினங்களுக்கு காலக்கெடுவுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வரும் மே 24 ஆம் தேதியுடன் அந்த அனுமதி உரிமம் காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில் காலக்கெடு முடிந்தும் அவர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து இந்தோ திபெட் எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கு இருந்து போகும்மாறு கேட்டுக் கொண்டனர். எனினும் அவர்கள் இருவரும் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டனர். அவர்களிடம் ஹர்மீத் கவுர் என்ற அப்பெண் கூறியதாவது “தான் தெய்வத்தின் அவதாரம். பார்வதி தேவியின் அம்சமாக நான் பூமியில் அவதரித்து இருக்கிறேன். சிவ பெருமானின் தரிசனத்துக்காக இங்கு வந்துள்ளேன்.
கைலாயத்தில் உள்ள சிவபெருமானை மணம்புரியவே இங்கு வந்தேன்” என தெரிவித்தார். அங்கு இருந்து வர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். பின் போலீஸ் குழு ஒன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அப்பெண்ணின் தாயார் அங்கு இருந்து கிளம்ப சம்மதம் தெரிவித்தார். இருப்பினும் அப்பெண் அடம் பிடித்தார். மேலும் தன்னை வற்புறுத்தினால் இங்கேயே தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். பின் மருத்துவர் உடன் கூடிய குழு ஒன்று அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரை வலுக்கட்டாயமாக மீட்டுகொண்டு வந்துள்ளது. அப்போது அவருடைய மன நிலை சரியில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் தார்ச்சுலாவில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.