லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமாக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 2020 அக்டோபரில் உடல் நலக்குறைவால் இறந்தார். ராம் விலாஸ் பஸ்வான் இறக்கும் வரையிலும் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். டெல்லியில் 12 ஜன்பத்பங்களாவில் ராம் விலாஸ் பஸ்வான் வசித்து வந்தார். ராம் விலாஸ் பஸ்வான் இறந்த பின் அந்த பங்களாவில் அவரது மகனும், எம்பியுமான சிராக் பஸ்வான் பயன்படுத்தி வந்தார். கடந்த வருடம் அந்த பங்களாவை காலி செய்யும்படி சிராக் பஸ்வானுக்கு மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் ஒன்று அனுப்பியது. எனினும் சிராக் பஸ்வான் அந்த பங்களாவை காலி செய்யாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எஸ்டேட் இயக்குனரகம், 12 ஜன்பத் பங்களாவில் இருந்து சிராக் பஸ்வானை வெளியேற்றும் உத்தரவை செயல்படுத்த ஒரு குழுவை அனுப்பியது. அக்குழு அந்த பங்களாவில் இருந்து சிராக் பஸ்வானை வெளியேற்றியது. இந்த நிலையில் அந்த பங்களாவில் இருந்து வெளியேற்றிய விதம் வருத்தம் அளிக்கிறது என்று சிராக் பஸ்வான் கூறினார். இது குறித்து சிராக் பஸ்வான் கூறியிருப்பதாவது, வீட்டை காலிசெய்த விதம் எனக்கு வருத்தமாக உள்ளது. எனக்கு எப்போதுமே அந்த பங்களா வேண்டுமென நான் கூறவே இல்லை. என் குடும்பம் சட்ட ஒழுங்கை மதிக்கிறது. நாங்கள் வீட்டைக் காலிசெய்யத் தயாராக இருந்தோம்.
ஆனால் ஏன் இப்படி அவமானப்படுத்தப்பட்டோம்..? என பீகார் மக்கள் இவற்றையெல்லாம் பார்க்கிறார்கள். மறைந்த என் அப்பா ராம்விலாஸ் பஸ்வானுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவைக் காலிசெய்ய நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். அதாவது மார்ச் 29ஆம் தேதி அந்த பங்களாவை காலி செய்வதற்கான உத்தரவு மார்ச் 30ம் தேதி வரலாம் என அதிகாரிகள் எங்களுக்கு தெரிவித்தனர். நாங்கள் அவற்றிற்கு தயாராகி 3 மணிநேரத்தில் பங்களாவை காலி செய்தோம். ஆனால் டெல்லி காவல்துறையினருடன் அதிகாரிகள் வந்து வீட்டை அடித்து நொறுக்கியதோடு என் தந்தையின் புகைப்படம், பி.ஆர். அம்பேத்கர் சிலை உள்ளிட்ட பொருட்களை சாலையில் வீசிய விதம் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இந்த அரசு அண்மையில் என் தந்தைக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியது என்று அவர் தெரிவித்தார்.