பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நேற்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்து இருக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 14ஆம் தேதி வரை நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க ஏற்பாடு செய்துள்ளது. அந்த அடிப்படையில் இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்தார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், “நம் நாட்டின் எல்லைகள் 2014 ஆம் வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பாதுகாப்பாக இருக்கின்றன. பல திட்டங்களில் பயனாளர்களில் போலியாகயிருந்த 9 கோடி பெயர்களை நாங்கள் நீக்கியுள்ளோம்.
நாடு முழுதும் இதுவரையிலும் கிட்டத்தட்ட 200 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. சென்ற 8 வருடங்களில் நான் என்னை ஒரு முறைகூட பிரதமராக நினைத்ததில்லை. கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டும்தான் பிரதமர் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆனால் கோப்புகள் சென்றவுடன் நான் பிரதமராக கிடையாது. என் வாழ்க்கையின் எல்லாமான 130 கோடி மக்களின் முதன்மை சேவகன் நான்.
என்னுடைய வாழ்க்கை உங்களுக்காகத் தான். கடந்த 2014-க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் குடும்ப அரசியல் ஊழல் குறித்து மட்டுமே மக்கள் பேசுவார்கள். ஆனால் இப்போது திட்டங்கள், லாபங்கள், முன்னேற்றம் பற்றி மக்கள் பேசி வருகிறார்கள். இந்தியா எந்நாட்டின் முன்பும் தலை குனிந்து நிற்க தேவையில்லை. உலக நாடுகளிடம் இந்தியா மீதான பார்வை மாறியிருக்கிறது. இந்தியாவை யாரும் உதவியற்ற சூழ்நிலையிலுள்ள நாடாக பார்க்கவில்லை. இந்தியா மற்ற நாடுகளுடன் நேருக்குநேர் சமமாக நிற்கிறது” என்று மோடி பேசினார்.