தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான் பெறப்போகும் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி என்று குஷ்பு கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் கோபாலபுரம் பகுதியில் குஷ்பு நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. அதனால் தொகுதி முழுவதும் வன்முறையை தூண்டி விடுகிறது. கடந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான பல செயற்பாடுகளை திமுக தொடர்ந்து செய்து வந்தது. ஆனால் பாஜகவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. நாட்டின் உயர்ந்த பதவிகளில் பெண்களை அமர்த்தி அழகு பார்க்கிறார்கள்.
பெண்களுக்கான நலன் கல்வி உள்ளிட்ட துறைகளில் பாஜக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதனால் பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தொகுதி மக்கள் எனக்கு வாக்கு அளிக்க வேண்டும். இந்த தேர்தலில் நான் பெறப்போகும் வெற்றி என்னு டையது மட்டுமல்ல. ஒட்டுமொத்த பெண்களின் வெற்றியாகக் கருதப்படும் என்று அவர் கூறியுள்ளார்.