திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடையாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை மயிலையில் திமுகவின் கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 234 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நான் திமுக தலைவரிடம் சொல்லி இருக்கிறேன்.
குறிப்பாக சென்னை தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் என்பதை தலைவர் சொல்வதற்கு முன்பே நான் சொல்கிறேன். அவரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்தால் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக இருந்தபோது கூட அவரது மகன் ஸ்டாலின் இதுபோன்று கூட்டணி தொகுதிகள் குறித்த முக்கிய கருத்துக்கள் எதையும் சொல்லமாட்டார். ஆனால் தற்போது உதயநிதியின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என பல்வேறு கருத்துக்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர் தெரிவித்துள்ள கருத்து அதை உறுதிப்படுத்துகிறது.