கேரளாவில் மாணவி ஒருவர் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியபின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகள் நெஹ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நெஹ்யா தன் பிறந்தநாளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் நண்பர்களுடன் வீட்டில் கொண்டாடியுள்ளார். அதன் பின்பு அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதாவது நெஹ்யா வழக்கமாக காலையில் ஏழு மணியளவில் எழுந்து அறையில் இருந்து வெளியே வந்துவிடுவாராம். ஆனால் சம்பவத்தன்று ஒன்பது மணிக்கு பிறகும் வெளியே வராததால் அவரின் தந்தை சந்தேகமடைந்து அறையின் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்க தாமதமானதால் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்துள்ளனர். அதன் பிறகு உள்ளே சென்ற அவர் நெஹ்யா சடலமாக கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெஹ்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாக காவல்துறையினர் கருதி வந்த நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் அறையில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் “நான் போகிறேன்” என்று மட்டும் அதில் எழுதியிருக்கிறார்.
காவல்துறையினர் இதனை வித்தியாசமான வழக்காக கருதி விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த அன்று இரவு அவரின் வீட்டில் தந்தை மற்றும் சகோதரியுடன் இருந்துள்ளார். அவரின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நெஹ்யா பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாமல் அந்த கடிதத்தில் இரண்டே வார்த்தைகள் மட்டும் எழுதப் பட்டிருப்பதால் நெஹ்யாவின் மொபைலை சோதனைக்கு உட்படுத்த காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.