தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவர் தமிழில் நடித்த ஜெய்ஹிந்த் மற்றும் முதல்வன் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக முதல்வன் திரைப்படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு நடிகர் அர்ஜுன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக நடிக்க வந்து விட்டேன். என்னுடைய மகள்கள் என்னுடைய பழைய படத்தை பார்த்து கேலி செய்கிறார்கள். ஸ்ரீ ஆஞ்சநேயம் எனும் தெலுங்கு படத்தில் ஆஞ்சநேயராக நடித்தேன்.
அதற்குப் பிறகு என்னை யார் பார்த்தாலும் கையெடுத்து கும்பிடுவார்கள். அதேபோன்று முதல்வன் படத்தை பார்த்த பிறகு நிறைய பேர் என்னிடம் நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள் என்று சொன்னார்கள். அந்தப் படத்தில் வருவது போன்று தலைவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். முதலில் அந்த படத்தில் நடிப்பதற்கு யோசித்தேன். ஆனால் முதல்வன் திரைப்படம் எனக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இயக்குனராக வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருக்கிறது. நடிகர்களை பற்றி கிசுகிசுக்கள் வந்தால் அவர்களின் குடும்பத்தினர் மிகவும் வேதனைப்படுவார்கள். எனக்கு ஒரு நாள் முதல்வராக வாய்ப்பு கிடைத்தால் கல்வி மற்றும் மருத்துவத்தை அனைத்து மக்களுக்கும் இலவசமாக்குவேன் என்று கூறினார்.