திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் கேர் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 78,582 கோரிக்கை மனுக்களை மக்களிடமிருந்து பெற்றுள்ளனர். அதில் 45,088 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது.
அதில் தகுதியுள்ள மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும். தமிழகத்தில் எந்தத் தனிமனிதருக்கும் அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை வைக்க மனு இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம். அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். மனுநீதி சோழன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். மனு வாங்கும் சோழனாக வலம் வரக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. முதல்வர் கையில் மனுவை கொடுத்தால் தான் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வந்துள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியிலும் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் எங்களது தோளில் இறக்கி வைக்க வேண்டும். அவற்றை நாங்கள் நிறைவேற்றிக் காட்டுவோம். கடந்த கால சுமைகள் மற்றும் சோகங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஒரு சிறப்பான ஆண்டு பிறக்கப் போகிறது. மக்கள் தங்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022ஆம் ஆண்டு அமையட்டும். இந்த ஆண்டின் சிறந்த ஆண்டாக ஆக்குவதற்கு தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து துணை நிற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.