நான் மரணமடையவில்லை தற்போதுவரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டு வருவேன் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
தனக்கென்று ஒரு நாடு தனக்கென ஒரு தீவு என்று அமைத்து வைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் நித்யானந்தா தற்போது சமாதி நிலையில் இருப்பதாகவும், அதில் இருந்து மீண்டு விரைவில் வருவேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: “அன்புள்ள பக்தர்கள், அன்பான சீடர்கள், கைலாச வாசிகள் உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டு உள்ளேன். நான் மரணமடையவில்லை. மிக விரைவில் எனது உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன்.
மகா கைலாஸாவின் அசாதாரணமான ஆற்றலை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்” என்று அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த பலரும் உங்கள் பதிவுக்கு நன்றி.. நீங்கள் மீண்டும் வரவேண்டும். உங்கள் தரிசனத்திற்காக காத்து இருக்கிறேன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே நித்தியானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. வருகிற 14-ஆம் தேதி பௌர்ணமி அதற்கு முன்பு நித்தியானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேர்வார் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.