காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகளோடு கலந்துரையாடினார். அதுமட்டுமின்றி மேடையில் தண்டால் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. அந்த மாணவிகளில் சிலரை ராகுல் காந்தி டெல்லிக்கு வரவழைத்து தனது வீட்டில் தீபாவளி விருந்து வழங்கினார்.
அப்போது அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோ காட்சிகள் சிலவற்றை தற்போது ராகுல்காந்தி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவில் மாணவி ஒருவர், “நீங்கள் பிரதமரானால் முதலாவதாக என்ன உத்தரவு பிறப்பிப்பீர்கள்?” என்று ராகுல்காந்தியிடம் கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, “பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவேன்” என்று கூறினார்.
மற்றொரு மாணவி, “குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டதற்கு ராகுல்காந்தி, “குழந்தைகள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும், அந்த பணிவு அவர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்கும் என்று கூறுவேன்” என்றார்.