செல்போன் டவரின் மீது வாலிபர் எறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருசங்கர் என்ற மகன் இருக்கிறார். இவர் கேபிள் டி.வி ஆபரேட்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவர் தி.மு.க கட்சியின் கொடி நிறத்திலான துண்டை அணிந்து கொண்டு கட்டகாமன்பட்டிக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த ஒரு செல்போன் டவரின் மீது ஏறியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வத்தலக்குண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால் வாலிபர் அதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலினை பார்த்தால்தான் கீழே இறங்குவேன் என திட்ட வட்டமாக கூறிவிட்டார். இதனால் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களும் வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் வாலிபர் எதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் ஸ்டாலினின் கார் அவ்வழியாக கடந்து சென்ற பின்னரே கீழே இறங்கி வந்தார். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் வாலிபருக்கு தண்ணீர் கொடுத்தனர். அதன்பிறகு காவல்துறையினர் குருசங்கரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.