தமிழகத்தில் சசிகலா வருகை பற்றி விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் நாளை தமிழகத்திற்கு வர இருப்பதால், அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் சசிகலாவின் வருகையால் அதிமுகவினர் பதற்றத்தில் இல்லை தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வீர குலத்தில் பிறந்தவன் மார்பில் பாய்ந்த வேலை எடுத்து மதம் பிடித்த யானை மீதுதான் வீச வேண்டும். சிறு நரி மீது அல்ல” என்ற அண்ணாவின் வரிகளை அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அமைச்சரின் கருத்துக்கு எல்லாம் பதில் கூற நான் விரும்பவில்லை என்று அவர் கூற வருகிறார்.