பேருந்துக்கு அடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் படுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுபாலப்பட்டியில் இருந்து சங்கராபுரம் வழியாக டவுன் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு நபர் திடீரென பேருந்தின் முன்பு உருண்டு சென்று பேருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டதை பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து பேருந்து ஓட்டுநரும் பயணிகளும் அந்த நபரை வெளியே வருமாறு அழைத்தும் அவர் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பாலப்பட்டு பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இவர் தனது மனைவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென பேருந்தின் அடியில் புகுந்து படுத்துக்கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து மனைவியுடன் அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.