மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி நாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் அங்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உலக அமைதி மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் இத்தாலி, ஜெர்மன் பிரதமர் மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மத்திய அரசிடம் வெளிநாடு செல்வதற்காக அனுமதி கோரியிருந்தார். ஆனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய மம்தா பானர்ஜி, “ரோமில் உலக அமைதி பற்றிய ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக நான் அழைக்கப்பட்டேன். நான் கலந்துகொள்வதற்கு இத்தாலி சிறப்பு அனுமதி அளித்தது. ஆனால் மத்திய அரசு மறுத்தது .உங்களால் என்னை தடுக்க முடியாது. நான் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பவில்லை. ஆனால் இது தேசத்தின் மரியாதை பற்றியது. பிரதமர் அவர்களே இந்துக்களை பற்றி பேசிக்கொண்டே இருங்கள். நானும் ஒரு இந்துப் பெண். ஏன் என்னை அனுமதிக்கவில்லை? அப்படியானால் நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.