நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் அடுத்த தேவனம்பாளையம் பகுதியில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார் வந்தது. அந்த புகாரின்படி சேலம் அலகு ஆய்வாளர் பாலமுருகன், நாமக்கல் காவல் அலகு எஸ்.ஐ. அகிலன் போன்றோர் அடங்கிய குழுவினர் பரமத்தி வேலூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் எந்த வித உரிமையோ, ஆவணமோ இன்றி சட்ட விரோதமாக அதிக லாபத்துக்கு விற்பனை செய்வதற்காக 50 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விசாரணை நடத்தியதில் அப்பகுதியிலுள்ள ஒரு இடத்தில் ஸ்டேண்டிங் டேங்கில் 20 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது. அதன்பின் 70 ஆயிரம் லிட்டர் கலப்படடீசல் மற்றும் டாரஸ் லாரியை பறிமுதல் செய்ததுடன், லாரி மற்றும் ஆயில் உரிமையாளர் திருச்செங்கோட்டை சேர்ந்த மதிவாணன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு 70 ஆயிரம் லிட்டர் கலப்படடீசல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.